Top News

`7 அடுக்குகள்; 7 கலசங்கள்' - சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உபயம் செய்த விவசாயிகள்

தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி, ஏற்கெனவே கும்பாபிஷேகம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி மட்டும் நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் பிரமாண்டமான ராஜகோபுரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள பிராகாரங்களில் பல்வேறு இடங்களில் புனரமைப்புப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இதையடுத்து, திட்ட மதிப்பீடு செய்து இரண்டரைக் கோடி ரூபாய் செலவில், 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்தில் 7 அடுக்குகளில் அமைய உள்ள 7 கோபுரக் கலசங்களை நன்செய் இடையாரைச் சேர்ந்த விவசாயிகள் நேர்த்திக் கடனாக வழங்கினர்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலசங்கள்

இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரத் திருக்குட நன்னீராட்டு விழா வரும் ஜூலை 6 - ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் 7 அடுக்குகளில் அமைய உள்ள 7 கோபுரக் கலசங்களை நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டது. இந்தக் கலசங்களை வழங்கும் நிகழ்வு, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரில் நடைபெற்றது. இந்த கோபுரக் கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாயிகள் பொன்னர், சங்கர் ஆகியோர் வழங்கினர்.

செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 4.5 அடி உயரம் கொண்டது. இந்த கலசங்கள் அனைத்திற்கும் நன்செய் இடையாறில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலசங்களை வைத்து, அந்த வாகனத்திற்கு மலர்தூவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட இந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர் மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. வரும் ஜூலை 2-ம் தேதி சமயபுரம் கோயிலை இந்த வாகனம் சென்றடைய இருக்கிறது.



from விகடன் https://ift.tt/NVUozXr
via IFTTT

Post a Comment

புதியது பழையவை