ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுவாமி சன்னதியில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜை பிரசித்தி பெற்றதாகும். கோயில் நடைதிறப்பிற்குப் பின் முதலாவதாக நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் லிங்கத்திற்கு பசும்பாலினால் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேக பால் வழங்கப்படும்.
இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்தார். ராமநாதபுரம் வந்த அவரை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து ராமேஸ்வரம் சென்ற அவர் தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார்.

இன்று அதிகாலை 5.40 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயில் கிழக்கு கோபுரம் வழியாக வந்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.
பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு அபிஷேக பசும்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த அவர், கோயில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
ஆளுநர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் எஸ்.பி.தங்கதுரை தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
from விகடன் https://ift.tt/ROYq3hb
via IFTTT
கருத்துரையிடுக