மேல்மலையனூரில் 25 மாதங்களுக்கு பிறகு; ஊஞ்சல் மண்டபத்தில் துர்க்காதேவியாய் எழுந்தருளிய அங்காளம்மன்!

 

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த  மேல்மலையனூர் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இவ்விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா அவர்கள் கலந்துகொண்டு அம்மானை தாலாட்டி வழிபட்டனர்.

மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர். 

 கடந்த இரண்டு ஆண்டுகளாக  பெருந்தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் கோவிலின் உள்பகுதியில்  பூசாரிகளால் ஆகம விதிப்படி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 

தற்போது நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 25 மாதங்களுக்கு பிறகு பங்குனி மாத அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வருகைதந்த வண்ணம் இருந்தனர்.

 ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. இரவு 12 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் துர்க்காதேவி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி தாலாட்டு பாட்டு இசைக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மா, அங்காளம்மா என்ற கோஷத்துடன் தேங்காய் மற்றும் எலுமிச்சை பழத்தில் சூடமேற்றி வழிபட்டனர்.

விழாவினை இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.ராமு தலைமையிலான அலுவலர்கள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி தலைமையிலான அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு) ரவீந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் . மேலும் தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

பக்தர்கள் மற்றும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Post a Comment

புதியது பழையவை