Top News

நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி!

இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் எழுத்து கொண்ட சங்ககால நடுகற்கள் சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றிலும் ஆய்விலும் சிறப்பான இடத்தை இந்த நடுகற்கள் பெறுகின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன்முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய காலத்தை உறுதிப்படுத்தப் புதிய சான்றுகள் கிடைத்துள்ளன.

புலிமான்கோம்பை சான்று

கடந்த நூற்றாண்டுவரை குகைகளில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை என்றே பரவலாக நம்பப்பட்டு வந்தது. இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள் நம் நிலத்தில் நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாகக் கூறியது. ஆனால் இலக்கியம் கூறும் இநக்ச் செய்தியை நிரூபிக்கும் வண்ணம் பண்டைய எழுத்து கொண்ட நடுகல் கிடைக்காமல் இருந்தது. சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போலக் கருதி அவை வரலாற்று ஆவணம் அல்ல, காலத்தால் அந்நூல்கள் பிற்பட்டவை என்ற ரீதியில் சிலரால் கருதப்பட்டு வந்ததை இந்தக் கல்வெட்டுகள் பொய்யாகச்செய்தன.

சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, கரந்தை எனும் போர் புரியும் வீரர்களுக்கு மட்டுமின்றி நாடாண்ட மன்னர்களுக்கும் எடுக்கப்பெற்றன.

கரந்தை எனும் போர்

அதியமான் நடுகல்: முதன்முதலாய்த் தமிழகத்திற்குக் கரும்பை அறிமுகம் செய்தவர்கள் அதியமான்கள். அவர்களில் சிறந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்.

'நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ!' (புறம் 232) என்றும் 'கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!' என்றும் பாடுகிறார்.

மேலும் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இவன் போரிட்டு நடைபெற்ற போரில் வேல்பாய்ந்து இறந்தான். இறந்தவன் உடல் தீயில் இடப்பட்டது, இதனை,

'எறிபுனக் குறவன் குறைய லன்ன

கரிபுற விறகின் ஈம ஓள்ளழற்

குறுகினும் குறுகுக குறுகாது சென்று

விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

திங்கள் அன்ன வெண்குடை

ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே!' (புறம் 235) என்றும் குறிப்பிடுகிறார்.

இன்றைய தர்மபுரி பகுதியே அன்றைய தகடூர் நாடு. புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் எங்கு ஒளிந்துள்ளதோ? இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புலிமான்கோம்பை நடுகற்கள் கிடைத்துள்ளன. நிச்சயம் இந்த நடுகல்லும் ஒரு நாள் வெளிவரும். அந்தக் கால வழக்கப்படி அதியருக்கு நிச்சயம் பெரிதாக உயர்பதுக்கை ஏற்படுத்தி வழிபாட்டில் வைத்திருப்பர். இன்று எங்கு யாரால் வணங்கப்படுகிறதோ அதியர் கோமானின் நடுகல்?

மற்றொரு புறப்பாடல் (புறம்.261) பாடல் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர், 'வெற்றி கொள்ளும் வேலையுடைய வீரன் நடுகல் ஆகிவிட்டான்' என்ற செய்தியை அறிகிறோம்.

வடமோதங்கிழார் என்ற புலவர் கரந்தை வீரனைப் பற்றி நேரில் பார்த்ததைப் போல அழகாக விவரித்துள்ளார். அவர் 'ஊர் நிரையைப் பாம்பின் வாய்ப்பட்ட நிலா மீண்டு வருவதுபோல் (எதிரிகள்) பகைவர்கள் கொண்டுசென்ற ஆநிரைகளை மீட்டு வந்தான். அவன் மீட்ட போது பகைவர் விட்ட அம்புகள் ஆற்றங்கரை இலக்குக் கம்பத்தின் மீது தைத்த அம்புகளைப் போல தைத்து நிற்கின்றன.

பாம்பின் உடலிலிருந்து தோல் உரிந்து விழுவது போல அவன் உயிர் பிரிந்தது. பிரிந்த உயிர் ஆனிலை உலகம் சென்றடைந்தது. அவனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல்லில் அவன் புகழ் பொறிக்கப்பெற்றது. அதற்குப் பந்தல் போட்டுப் பூச்குடி வழிபடுகின்றனர் (புறம் 260.12-28.)

இலக்குக் கம்பத்தில் அம்புகள் தைத்துக் கொண்டிருப்பது போல் வீரனுடைய உடம்பில் அம்புகள் தைத்திருந்தன. செங்கம் - தருமபுரி நடுகற்கள் சிலவற்றில் வீரர்களின் உடலில் அம்புகள் தைத்திருப்பதைக்காணலாம்.

உயர்பதுக்கை

மற்றொரு புறப்பாடல் உடன்வந்த வீரர்கள் நீங்கிய பின்னும் தனியே நின்று போரிட்டு நிரைமீட்டு மாண்ட வீரனுக்கு நடுகல் நடப்பட்டதைக் குறிப்பிடுகிறது. நடுகல் வீரனை வணங்கிச் செல்லுமாறு பாணனுக்குப் புலவர் கூறுகிறார்.

மயிற்பிலி சூட்டப்பட்ட செய்தியுடன் பதுக்கை அமைக்கப்பட்ட செய்தி புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. 'நடுகல்லிளைக் காலந்தோறும் வணங்கி விருந்தெதிர் பெறல் வேண்டும்' என்றும் 'தன் கணவருக்கு நாடு தரு விழுப்பகை எய்தல் வேண்டும்' என்றும் ஒரு மனைவி வேண்டுவதை (புறம். 306) அள்ளூர் நன்முல்லையார் பாடுகிறார். நடுகல்லை மக்கள் நீராட்டி நெய் விளக்கேற்றிப் பலியூட்டியதைப் புறநானூற்றில் (புறம்.329) உள்ள ஒரு பாடல் சுட்டுகிறது.

இவ்வாறு சங்கஇலக்கியம் நடுகற்கள் அமைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்ததை பற்றி நிறைய குறிப்புகள் தருகின்றன. இவற்றுள் நமக்கு தற்சமயம் கிடைத்த சில சங்ககால நடுகற்கள் குறித்து அடுத்தடுத்து விரிவாகக் காண்போம்.



from விகடன் https://ift.tt/vgIOniq
via IFTTT

Post a Comment

புதியது பழையவை