தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா. தற்போது சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவரை சக்தி விகடன் ஆன்மிகப் பகுதிக்காக சந்தித்தோம்.
“எல்லோர்கிட்டேயும், எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்காங்க. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அம்மா, அப்பா தான் நம்முடைய முதல் கடவுள். அவங்களை நமக்காகக் கொடுத்த கடவுளுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகணும்.

என் அப்பாவுடைய குலதெய்வம் கோயம்புத்தூரில் இருக்கும் வீரமாச்சியம்மன், கல்யாணத்துக்குப் பிறகு அங்காள பரமேஷ்வரி. எனக்கு இஷ்ட தெய்வம்னா சாய் தாத்தாவும், முருகனும்தான்! சின்ன வயசில இருந்தே சாய்பாபாவை சாய் தாத்தான்னுதான் கூப்பிடுவேன். என் பெஸ்ட் பிரெண்ட்னா அது முருகன் தான்!
சிறு வயதுமுதலே காலை எழுந்ததும் குளிச்சிட்டு வடபழனி முருகன் கோயிலுக்குப் போயிருவேன். அங்க பள்ளியறையில் முருகனுக்கு சாத்தின மாலையை என் கழுத்தில் போட்டு விடுவாங்க.. பிறகு ஸ்கூலுக்குப் போயிட்டு சாயங்காலம் மறுபடி கோயிலுக்குப் போய் ‘அன்னைக்கு என்ன நடந்தது’ன்னு முழுசும் அவர்கிட்ட சொல்லிடுவேன். மறுநாள் காலையில் அந்த சாயங்காலத்தில் இருந்து மறுநாள் காலை வரைக்கும் என்ன நடந்ததுங்கிறதை சொல்லுவேன்.
என் கல்யாணம் வரைக்குமே இதை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். கல்யாணமாகி தஞ்சாவூர்போன பிறகு கோயிலுக்குப் போக முடியாம போயிருச்சு. இப்ப ஏதாவது விஷேச நாள்களில் போய் முருகனை தரிசனம் பண்றதோட சரி!
ஒரு முறை தைப்பூசம் அன்னைக்கு விடியற்காலையில் மூன்று மணிக்கெல்லாம் நான், அம்மா, தங்கச்சி மூன்று பேரும் வடபழனி முருகன் கோயிலுக்குக் கிளம்பினோம். எங்க வீட்டு வாசலில் இருந்து செம இருட்டு.. ரோட்டுல ஒருத்தர் கூடக் கிடையாது. இதெல்லாம் நான் சொன்னா நீங்க நம்புவீங்களா.. மாட்டீங்களான்னு கூடத் தெரியாது.
முருகனை பார்க்கத்தானே போறோம்.. அவர் கூட்டிட்டுப் போவார்னு மட்டும்தான் சொன்னேன். திடீர்னு சல் சல்னு ஒரே காவடிச் சத்தம், அந்தப் பால் குடத்தை எடுங்க... அங்க போறாங்க பாருங்க அவங்க கூட சேர்ந்து போங்க... இப்படின்னு ஒரே சத்தம். 100 அடி ரோட்டிற்கு வந்துட்டோம்.. அங்க வந்த பிறகுதான் ரோட்டு லைட் வெளிச்சம் வந்துச்சு. அந்த ரோட்டிற்கு எதிர்புறம் கோயில். வெளிச்சத்துக்கு வந்த பிறகு திரும்பி பார்த்தா அங்க யாருமில்லை.

அதே மாதிரி, ஒரு சீரியல் ஷூட்டிங் முடிஞ்சிட்டு நைட் 12,1 மணி இருக்கும்.. அது பைபாஸ் மாதிரியான இடம்..
ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.. எங்களுக்கு வீட்டுக்கு போக அங்க ஆட்டோ, கார்னு எதுவும் கிடைக்கல. அம்மா திட்டிட்டே, “கொஞ்சம் கூட பயமே இல்லையா”ன்னு திட்டினாங்க. நான் ரொம்ப நிதானமா, “அம்மா பதட்டப்படாதீங்க.. சாய் தாத்தா வருவாங்கம்மா”ன்னு சொல்லிட்டு என் கையில் சாய் தாத்தா உருவம் பதித்த மோதிரத்தைத் தொட்டு வணங்கிவிட்டு ‘தாத்தா வாங்க’ன்னு சொல்லிட்டிருந்தேன்! திடீர்னு ஒரு ஆட்டோ வந்து நின்னுச்சு. அந்த ஆட்டோவுடைய முன்பக்கம் பெரிய சாய் தாத்தாவோட ஃபோட்டோ ஒட்டியிருந்துச்சு.
ஆட்டோ ஓட்டிட்டு வந்த பையனுக்கு 19,20 வயசு இருக்கும். அவன் கொஞ்சம் கோபமா, “வண்டியில ஏறுங்க”ன்னு சொல்லவும் அதுக்கு அம்மா, “நாங்க எங்க போகணும்னே கேட்காம ஏறச் சொல்றீங்களே”ன்னு கேட்கவும் “அதெல்லாம் தெரியும்.. தெரியும் ஏறுங்க”ன்னு சொன்னார்.
நாங்க எதுவுமே சொல்லாம சரியா எங்க வீட்டு வாசலில் இறக்கிவிட்டுட்டு இனி இந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் போகக் கூடாதுன்னு சொன்னார்.

“அம்மா இருப்பா பையை வாசலில் வச்சிட்டு காசு எடுத்து தரேன்”னு சொன்னாங்க. நாங்க இறங்கிப் பையை வச்சிட்டுத் திரும்பி பார்த்தா அந்த ஆட்டோ அங்க இல்லை.. இன்னைக்கு வரைக்கும் அந்த ஆட்டோவையோ, ஆட்டோ ஓட்டினவங்களையோ நான் சந்திக்கவே இல்ல.
சாய் தாத்தாதான் என்னை அன்னைக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டதுன்னு நான் இப்ப வரைக்கும் நினைக்கிறேன். இந்த மாதிரி சாய் தாத்தா என் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கார்!” என்று கண்களில் நீர்ததும்ப சிலிர்ப்போடு சொன்னார் நடிகை பிரியங்கா.
from விகடன் https://ift.tt/stGoFXV
via IFTTT
கருத்துரையிடுக