Top News

செஞ்சியில், சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சருடன் பங்கேற்ற புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள்! "வேர்களைத்தேடி திட்டம்" மூலம் தமிழர்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள பங்கேற்பு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் "வேர்களைத்தேடி திட்டத்தின்" மூலம் புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள் தமிழர்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள அமைச்சருடன் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத்தேடி" திட்டத்தின் மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு "அயலகத் தமிழர் தினம்” எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 தினங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் கொண்டாடி வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக "வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் ஆண்டுதோறும் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 200 தமிழர்களின் குழந்தைகள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில், தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் "வேர்களைத்தேடி” திட்டத்தின் இரண்டாம் பண்பாட்டு பயணத்தை தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை சார்பில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, இந்தோனேசியா, பங்களாதேஷ், பர்மா, உகாண்டா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து 100 ஆண்பிள்ளைகள் மற்றும் பெண்பிள்ளைகள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் வந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் தொன்மையான கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை பெறுவார்கள்.

இந்நிலையில் இக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 13) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர், இவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு அப்பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

இதைத் தொடர்ந்து இக்குழுவினர் செஞ்சிக்கோட்டைக்கு வருகை தந்தனர், செஞ்சிகோட்டையில் உள்ள கல்யாண மஹால், நெற்களஞ்சியம், போர் வீரர்களின் குடியிருப்பு பகுதிகள், வெடிமருந்து கிடங்கு, குதிரை லாயம், தர்பார் வளாகம் மற்றும் புரதான வரலாற்று நினைவு சின்னங்களை பார்வையிட்டனர். மேலும், கோட்டையில் உள்ள தொன்மையான நினைவிடங்கள் பற்றி அவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்கி கூறப்பட்டது. இதை அவர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர் ஆர்வமுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 

இதனை அடுத்து மாலை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த இக்குழுவினரை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் ஆகியோர் மங்கள மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.

"வேர்களைத்தேடி திட்டத்தின்" மூலம் புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள் தமிழர்களின் சிறப்புவாய்ந்த சமத்துவ பொங்கல் விழா, உறியடி விழா, கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற பரதநாட்டியம், கிராமிய கும்மி, தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட பெருமைகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், இக்குழுவில் பங்கேற்றவர்கள் கும்மியாட்டம், நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்: உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "வேர்களைத்தேடி" திட்டத்தை அறிவித்து அதன் மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்கள் நலன் காக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக வழி நடத்தவும் அயலக தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் அயலக தமிழர் தினம் என்னும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அதலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத் தேடி என்றொரு பண்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளைஞர்கள் தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்த்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா, உரியடி திருவிழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வேர்களைத்தேடி திட்டத்தின் மூலம் புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள் அனைவரும் பங்கேற்று பொங்கல் வைத்து படையலிட்டு பொங்கலோ பொங்கல் என வழிபட்டனர். மேலும் உறியடி விழா நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று உற்சாகமாக உரியடித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்குழுவினர் வேர்களை தேடி திட்டத்தின் மூலம் தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடுகளை தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அயலகத் தமிழர் நலன் (ம) மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம் சார் ஆட்சியர் திய்யான் ஷு நிகம், மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் ஜனார்தனன், துணை ஆணையர் புகழேந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், தயாளன், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை