விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள பல்லவர் கால குடைவரை கோவிலான ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரம்மோற்ச விழா மே 24ம் தேதி அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அரங்கநாதர் பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து சூரிய பிரபை, சிம்ம வாகனம், கருட வாகனம் என நாள்தோறும் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சி மே 30 இன்று (வைகாசி 16) வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை முதலே மூலவர் மற்றும் உற்சவர் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9:00 மணி அளவில் உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருள மங்கள நாதஸ்வரம் மேளம், செண்ட மேளம் இசைக்க திரளான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கரகோசத்துடன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேரோட்டத்தில் பக்தர்கள் தங்கள் விலை நிலங்களில் விளைவித்த மணிலா, மிளகாய் உள்ளிட்ட தானியம் மற்றும் காய்கறிகள் தேரின் மீது வீசி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் தேரின் முன்பு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்ட நடனமாடியும், ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க திருத்து மாடவீதி வழியாக திருத்தேர் நிலையை வந்தடைந்தது.
இதில் சிங்கவரம் மற்றும் சுற்றுப்பகுதி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக