சந்திரயான் 3 விண்கலத்தை 4வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில், கடந்த 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறைந்தபட்சம் 233 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 71,351 கி.மீ தொலைவும் கொண்ட 4ம் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. சர்வதேச சந்திர தினத்தை சந்திரனுக்கு மிக அருகில் இந்தியா கொண்டாடுவதாகவும், நிலவுக்கான பயணத்தில் சற்று முன்நோக்கி நகர்ந்துள்ளோம் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
அடுத்தகட்டமாக சந்திரயானின் பயணப்பாதை ஜூலை 25-ம் தேதி மாற்றி அமைக்கப்படும். அதன்பின் ஆகஸ்ட் 1-ல் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கும், ஆகஸ்ட் 21ம் தேதி நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக