விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிராமத்தில் 23 ஜூலை 24 அன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 1.0 ஹெக்டர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், சுமித்ராகார்த்திகேயன் அவர்களின் விளைநிலத்தில் 1.0 ஹெக்டர் பரப்பளவில் ரூ.96,000/- மதிப்பிலான அரசு மானியத்துடன் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. டிராகன் பழமானது தற்பொழுது அதிகப்படியான நபர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது. இப்பழமானது 1 ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் வரை விளைச்சல் கிடைக்கக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது.
டிராகன் பழம் பயிரிடுவதற்கு அதிகப்படியான சூரிய வெளிச்சமும், விளைச்சல் மேற்கொள்வதற்கு குறைந்த அளவே நீர் ஆதாரமும் போதுமானது. டிராகன் பழமானது விளைச்சல் அதிகம் உள்ள காலங்களில் கிலோ ரூ.150-க்கும், விளைச்சல் குறைவான காலத்தில் ஒரு பழம் ரூ.100/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயி சுமித்ரா அவர்கள் தங்களுடைய விளை நிலத்தில் வளரக்கூடிய டிராகன் பழங்களை திண்டிவனம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் இதுபோன்ற அதிக இலாபம் தரும் பயிர் வகைகளை பயிரிடுவதற்கு தேவையான வழிமுறைகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் அறிந்துகொண்டு தாங்களும் காலத்திற்கேற்றவாறு பயன்தரக்கூடிய பயிர்வகைகளை பயிர் செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குநர் (பொ) சீனிவாசன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் ராஜலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக