Top News

இராஜராஜேஸ்வரியாக காட்சியளித்த மலையனூர் அங்காளம்மன்! இலட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காயில் சூடம் ஏற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் பிரிசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் "தை" மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு காலை முதலே மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு மலர்களை கொண்டு உற்சவ அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 10.30 மணியளவில் வடக்குமாட வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் இராஜராஜேஸ்வரியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனை கண்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய், எலுமிச்சை பழத்தில் சூடம் ஏற்றி அங்காளம்மன் தாயே அருள்புரிவாயே என கரகோசத்தோடு அம்மனை வழிபட்டனர்.

உற்சவத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி பழனி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி ) ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊஞ்சல் உற்சவத்திற்கு விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாவட்ட செய்தியாளர்:             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை