Top News

செஞ்சிக்கோட்டை ஏரிக்கரை முருகன் ஆலய 52 ம் ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா! பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை திருவண்ணாமலை சாலை B.ஏரிக்கரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஆலயத்தில் 52-ம் ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 21, ஆடி 5-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி ஹோமம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து ஆராதனையுடன் கொடியேற்று விழா நடைபெற்றது.

ஆடிகிருத்திகையை முன்னிட்டு ஜூலை 28, ஆடி 12-ம் நாள் அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,

இரவு 9 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியர், மற்றும் இடும்பனுக்கு பல்வேறு வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கள இசை, சிவவாத்தியம் இசைக்க, வான வேடிக்கையுன் சுவாமி வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி கிருத்திகை நாளான இன்று (ஜூலை 29, ஆடி 13-ம் நாள்) காலை 8 மணிக்கு செஞ்சி, எம்.ஜி.ஆர் நகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து

ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், 108 கிலோ எடை கொண்ட சக்திவேலுக்கு பால் அபிஷேகமும், 108 மூலிகை திரவிய விசேஷ அபிஷேகமமும் சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அக்னி சட்டி ஊர்வலம், சக்திவேல் வீதியுலாவும், பகல் 12 மணிக்கு பக்தர்கள் கொதி எண்ணெய்யில் வடை சுட்டு கையால் எடுத்தல், மிளகாய் பொடி அபிஷேகம், கருடசெடல், பறவை செடல், மழுவேந்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணியளவில் பக்தர்கள் தீ மிதித்தல் நிகழ்ச்சியும்,

பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, தாள் வேல், பறவை காவடி, உடல் முழுவதும் பழம் போடுதல், முதுகில் அலகு குத்தி அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுடன் தேர், உரல், ஜே.சி.பி. வண்டி, கிரேன் மற்றும் லாரிகளில் செடல் போட்டும், இழுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அன்னதான குழுவினரால் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பணைக் கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள், எடைபணி தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 30, ஆடி 14-ம் நாள் செவ்வாய்க்கிழமை இடும்பன் பூஜையுடன் நிறைவடைய உள்ளது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை