செஞ்சிக்கோட்டை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ரத உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையின் மலையின் மீது அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாள் உற்சவமாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை 22 ஆம் நாள் கொடியேற்றத்துடன் 10 நாள் ரத உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன், மலையடிவாரத்தில் ராஜகாளியம்மன், செஞ்சி மகா மாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் முதல் நாள் உற்சவம் தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் உபயதாரர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அன்னதானம், கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து 9ம் நாள் (மே 13) சித்திரை 30, செவ்வாயன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கூழ்வார்த்தல் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதலே கமலக்கண்ணி, ராஜகாளி மகாமாரி கோட்டை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து மகாமாரியம்மன் ஆலயத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 2.30 மணி அளவில்த பம்பை, உடுக்கை, மேளதாளம், சிவ வாத்தியம் இசைக்க வானவேடிக்கையுடன் கமலக்கண்ணி திரிசூலம், உற்சவ மகா மாரியம்மன் பல வித மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் மந்தைவெளி திடலில் நிலை நிறுத்தப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என திரளான பக்தர்களின் கரகோஷத்துடன் திருத்தேர் வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.
திருத்தேர் மாட வீதி செஞ்சி நான்கு முனை சந்திப்பு வழியாக தேர் நிலையை வந்தடைய திரு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் செஞ்சி, செஞ்சி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாட்டினை அறங்காவலர் அரங்க. ஏழுமலை, உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக